Wednesday, September 21, 2011

Capsicum Aloo dry


தேவை:
குடைமிளகாய் - ஒன்று
உருளைக்கிழங்கு - 4 சிறியது (பெரியதாக இருந்தால் 2)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - கால் பகுதி
பூண்டு - 3 அல்லது 4 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
காய் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். உப்பின் அளவை சரிப் பார்த்துக் கொள்ளவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
( இறுதியில் தேங்காய் மற்றும் முந்திரியை ஆரைத்து சேர்த்தால் சுவை கூடும் )

Mutton and Aloo Saalna

Ingredients:
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரைக் கிலோ
தக்காளி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - எட்டு
மிளகாய் தூள் - நான்கு தேக்கரண்டி
த‌னியா தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
த‌யிர் - 75 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
டால்டா (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - மூன்று மேசைக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - அரை க‌ட்டு
புதினா - கால் க‌ட்டு
தேங்காய் - நான்கு மேசைக்க‌ர‌ண்டி
முந்திரி - 25 கிராம்
க‌ச‌க‌சா ‍ - இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் - ஒன்று (சிறியது)
ப‌ட்டை ‍ - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு
கிராம்பு - நான்கு
ஏலக்காய் - மூன்று
செய்முறை:
ம‌ட்ட‌னில் கொழுப்பு மற்றும் ஜ‌வ்வு போன்றவற்றை நீக்கி ந‌ன்கு 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும். வெங்க‌யாம், த‌க்காளியை நறுக்கி வைக்க‌வும் கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும், முந்திரியை திரித்து அத்துட‌ன் தேங்காய் பொடி சேர்த்து த‌ண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள‌வும். தேங்காய் சேர்ப்பது என்றால் ஒரு சிறிய‌ மூடியும், முந்திரி, க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும். உருளைக்கிழ‌ங்கை தோலெடுத்து மீடிய‌மாக‌ நறுக்கிக் கொள்ள‌வும். ப‌ட‌த்தில் உருளை வைக்க‌வில்லை.

குக்கர் அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வெடிக்க விடவும். அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.

கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கி ஒரு நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.

பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும்.

தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.

கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.

நறுக்கி வைத்திருக்கும்‌ உருளையை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக‌க்ரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து ஐந்து விசில் விட்டு இறக்க‌வும். வெளியில் ச‌ட்டியில் வேக‌ போடுவதாக‌ இருந்தால் 20 நிமிட‌ம் வேக விடவும்.
குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ ச‌ட்டிக்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும். (குக்க‌ரில் எது வேக‌ வைத்தாலும் எவ்வ‌ள‌வு எண்ணெய் ஊற்றுகிறோமோ அது மேலே வ‌ந்துவிடும், பார்க்க நிறைய‌ எண்ணெய் போல் தெரியும், கொதிக்க‌ விடும் போது ச‌ரியாகிடும்.)

ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.

Kadai panneer

Ingredients:
மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2 (இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்... கடாய் மசாலா ரெடி) பனீர் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனை குளிர்ந்த நீரில் போட்டு தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி. நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போனதும் கடாய் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, அதில் பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்துக் கிளறி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்தும் இறக்கவும். இதேபோல் மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.